பள்ளிக்குள் நுழைந்து, பாடம் நடத்திக் கொண்டிருந்த பெண் ஆசிரியரைக் கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பெண் ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கேரி மாவட்டம் ஹிதாயத் நகர் பகுதியைச் சேர்ந்த நிஷாத் பாத்திமா (26) என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். வழக்கம் போல் நேற்று காலையில் பள்ளிக்குச் சென்ற அவர், மாணவர்களுக்குப் பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் காலை சுமார் 11.30 மணியளவில் முகமது சவுத் அன்சாரி (28) என்ற நபர் பாத்திமாவைச் சந்திப்பதற்காகப் பள்ளிக்கு வந்துள்ளார். நேராக இரண்டாம் மாடியில் உள்ள வகுப்பறைக்குச் சென்ற அவரைப் பார்த்த பாத்திமா, உடனடியாக வெளியேறுமாறு கூறியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அன்சாரி தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துப் பாத்திமாவைச் சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, அதே துப்பாக்கியால் அன்சாரியும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி வளாகத்திற்குள் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டு மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாகப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தக் கொலைக்கான உண்மையான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.