மனைவி, 3 மகள்களையும் கொன்றுவிட்டு தந்தைக்கு சாவகாசமாக டீ போட்டுக் கொடுத்த மகன்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடும்பத்தினரைக் கொன்றுவிட்டு சாவகாசமாகத் தந்தைக்குத் தேநீர் தயாரித்துக் கொடுத்துவிட்டுத் தப்பியோடிய நபரால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகமும் ஏற்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் வசித்து வரும் ராகுல் ஜா என்பவர், தனது மனைவி கீதா மற்றும் மூன்று மகள்களை நள்ளிரவில் கல்லால் பலமுறைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.
நள்ளிரவில் கொடூரக் கொலைகளை அரங்கேற்றிய அவர், அதிகாலையில் வழக்கம் போலப் பால் வாங்கி வந்து தனது வயதான தந்தைக்குத் தேநீர் தயாரித்துக் கொடுத்துள்ளார். அதன்பிறகு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
வீட்டில் படுகாயங்களுடன் கிடந்த 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், தீவிர விசாரணை நடத்தித் தப்பியோடிய ராகுல் ஜாவைத் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடுமையான நிதி நெருக்கடி அல்லது குடும்பத் தகராறு காரணமாக இக்கொடூரம் நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.