3 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
நெல்லை மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அழகிரிபுரத்தைச் சேர்ந்த நாற்பத்தியொன்று வயது கூலித் தொழிலாளி ஆனந்த் சேகர். இவர் கடந்த 2023ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 6,7 மற்றும் எட்டு வயதுடைய மூன்று சிறுமிகளை அந்தப் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இந்தத் துயரச் சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக அந்தச் சிறுமிகளை மிரட்டியுள்ளார்.
சிறுமிகளின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனித்த பெற்றோர், அவர்களிடம் விசாரித்தபோது இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆனந்த் சேகரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தச் சம்பவம் அரிதினும் அரிதான வழக்கு எனக் கூறி குற்றவாளி ஆனந்த் சேகருக்குத் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் தலா ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.