காதலிக்கு ஐபோன் கிப்ட் தர முகமூடி அணிந்து மாணவியிடம் நகை பறித்த இளைஞர்!

 

சென்னையில் காதலிக்கு ஐபோன் பரிசு வழங்க நினைத்து குற்றப்பாதையைத் தேர்ந்தெடுத்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனது காதலியின் பிறந்தநாளுக்கு 'ஐபோன்' பரிசளிப்பதற்காக, முகமூடி அணிந்து கொண்டு 10-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியின் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பியோடி துணிக்கடை ஊழியரைச் சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணாநகர் கிழக்கு, பள்ளியரசன் தெருவைச் சேர்ந்தவர் மலர்விழி (40). இவர் கடந்த ஜூன் 24-ஆம் தேதி இரவு, தனது 10-ஆம் வகுப்பு படிக்கும் மகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள உணவகம் ஒன்றிற்குச் சென்றுள்ளார். அவர்கள் அண்ணாநகர் கெனால் சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவன் திடீரென பாய்ந்துள்ளார்.

கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த மாணவியின் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, அந்த நபர் தனது வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார். இந்த அதிர்ச்சிச் சம்பவம் குறித்து மலர்விழி அளித்த புகாரின் பேரில், சத்திரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். கொள்ளையன் முகமூடி அணிந்திருந்ததாலும், அவனது வண்டியில் நம்பர் பிளேட் இல்லாததாலும் ஆரம்பத்தில் துப்பு துலக்குவதில் பெரும் சவால் நீடித்தது.

சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பல்வேறு சாலைகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் போலீசார் தீவிரமாக ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, சந்தேகத்திற்குரிய நபர் அணிந்திருந்த சட்டையில் 'வரிக்குதிரை' படமும், ஒரு தனித்துவமான கோடு வடிவமைப்பும் இருப்பதை போலீசார் உற்று நோக்கினர். அந்த சட்டையையே முக்கியத் தடயமாகக் கொண்டு அடுத்தடுத்த சிசிடிவி கேமராக்களைப் பின்தொடர்ந்த போது, அந்த நபர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, புளியந்தோப்பு சாஸ்திரி நகரைச் சேர்ந்த சரவணன் (24) என்பவரைப் போலீசார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கைதான சரவணன் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் இருக்கும் ஜவுளிக்கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்துள்ளார்.

அடுத்த வாரம் வரவிருக்கும் தனது காதலியின் பிறந்தநாளுக்கு எப்படியாவது ஒரு ஐபோனைப் பரிசாகக் கொடுக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அதற்குத் தேவையான பணம் இல்லாததால் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து, முகமூடி அணிந்து கொண்டு இந்த நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சரவணனிடமிருந்து மாணவியின் ஒன்றரை பவுன் தங்க நகையும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பதிவெண் இல்லாத இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. காதலிக்கு ஆடம்பரப் பரிசு தர நினைத்து, சட்டத்தின் பிடியில் சிக்கிய அந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.