கதவை மூடுவதில் தகராறு - ஓடும் ரயிலில் வாலிபர் குத்திக் கொலை!

 

மும்பையில் ஓடும் ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் மழை காரணமாகக் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 22 வயது வாலிபர் ஒருவர் சக பயணியால் கத்தியால் குத்திக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரயில்வே காவல் துறை தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள முதற்கட்ட விசாரணையின்படி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மயங்க் லோகர் (22) என்ற வாலிபர் மும்பையில் விற்பனைப் பிரதிநிதியாக வேலைப் பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில், மயங்க் லோகர் சர்ச்கேட் ரயில் நிலையத்திலிருந்து நாலாச்சோப்ரா நோக்கிச் சென்ற உள்ளூர் விரைவு ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்துகொண்டிருந்தார். அந்தச் சமயம் மும்பையில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

ரயில் அந்தேரி ரயில் நிலையத்தைத் தாண்டி போரிவிலி நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்த போது, வாசலின் ஓரம் நின்றிருந்த பயணிகளிடையே மழை நீர் உள்ளே வருவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மழையின் காரணமாக ரயிலின் வாசல் வழியாகப் பெட்டிக்குள் தண்ணீர் வந்ததால் கதவை மூடுவது குறித்து மயங்க் லோகருக்கும், அங்கிருந்த மற்றொரு பயணிக்கும் இடையே திடீரென கடுமையான தகராறு வெடித்தது. இந்த ஆத்திரத்தில் அந்த அடையாளம் தெரியாத பயணி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மயங்க் லோகரைச் சரமாரியாகக் குத்திவிட்டு, ரயில் அடுத்த நிலையத்தை அடைந்ததும் தப்பியோடிவிட்டார்.

கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த மயங்க் லோகரை மீட்ட பயணிகள், போரிவிலி ரயில் நிலையத்தில் அவரை இறக்கி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்துப் போரிவிலி ரயில்வே போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சக பயணிகளின் சாட்சியங்களின் அடிப்படையில், தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஓடும் ரயிலில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் மும்பை ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.