காதலியின் கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்... கனடாவில் இந்திய இளம்பெண் உயிரிழந்த துயரம்!
கனடாவில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண்ணை அவரது காதலன் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் இந்திய வம்சாவளியினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தமந்தீப் கவுர் (23) என்ற இளம்பெண் கனடாவின் எட்மொண்டன் நகரில் வசித்து வந்தார். டெல்லியைச் சேர்ந்த ரிதேஷ் குமார் (22) என்பவருடன் அவருக்குக் காதல் தொடர்பு இருந்துள்ளது. கடந்த ஜூலை 9-ம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ரிதேஷ் குமார் காதலி தமந்தீப் கவுரின் கழுத்தை நெரித்துக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட தமந்தீப் கவுர், உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த ஜூலை 12-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இச்சம்பவத்தைக் கொலை வழக்காகக் கனடா காவல்துறையினர் மாற்றினர்:
இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்ததாகக் காதலன் ரிதேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்த கனடா போலிஸார், அவரை உடனடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரிதேஷ் குமார் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் கல்வி மற்றும் வேலைக்காகச் சென்ற இந்திய இளம்பெண், காதலனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் பஞ்சாப் மற்றும் டெல்லியில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.