குளிர்பானத்தில் போதை மருந்துக் கொடுத்து பெண் பாலியல் வன்கொடுமை - வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய கொடூரம்!

 

தெலுங்கானா மாநிலத்தில் ஓட்டல் தொழிலில் கூட்டாளியாக இருந்த பெண்ணுக்குப் போதை குளிர்பானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதனை வீடியோவாகப் பதிவு செய்து மூன்று ஆண்டுகளாக மிரட்டி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ராயதுர்கத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் நபி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இணைந்து ஓட்டல் ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டு, அப்பெண் நபியிடம் ரூ. 43 லட்சம் வழங்கியுள்ளார். அதன்பிறகு ஓட்டல் தொழிலில் நல்ல லாபம் கிடைத்த நிலையில், 2023-ஆம் ஆண்டு பாக்ஸ் கிரிக்கெட் போட்டி மைதானம் ஒன்றையும் தொடங்கியுள்ளனர்.

கிரிக்கெட் மைதானத் தொடக்க விழாவின் போது ஏற்பாடு செய்யப்பட்ட மது விருந்தில், ஷேக் நபி அந்தப் பெண்ணுக்குப் போதை கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துள்ளார். அவர் மயங்கியதும் தனி அறைக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததுடன், அதனைத் தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

அடுத்த நாள் இதைக் குறித்துப் பெண் தட்டிக்கேட்டபோது, அந்த ஆபாச வீடியோவைக் காட்டி அவரது கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாகக் கூறி மிரட்டி வந்துள்ளார். இதனைப் பயன்படுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பெண்ணைத் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

நபியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள் ராயதுர்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஷேக் நபியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.