காதலியை கத்தரிக்கோலால் குத்தி கொன்றுவிட்டு காதலன் தற்கொலை முயற்சி!

 

அசாம் மாநிலத்தில் காதலி தன்னை ஏமாற்றுவதாகச் சந்தேகப்பட்ட இளைஞர் ஒருவர், அவரை விடுதி அறையில் வைத்து கத்தரிக்கோலால் குத்திக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

சோனிட்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாலினி குரியா (23) என்ற பெண், தனது தோழிகளுடன் சென்னையிலிருந்து இரயில் மூலம் ரங்கியா இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அவரை அழைத்துச் செல்வதற்காக உடல்குரி மாவட்டத்தைச் சேர்ந்த அவரது காதலன் அபிஜித் கிண்டோ (22) அங்கு வந்திருந்தார். பின்னர் அனைவரும் இரயில் நிலையம் அருகிலுள்ள ஒரு விடுதியில் தங்கினர்.

அபிஜித் தனியாக அறை பதிவு செய்திருந்த போதிலும், நைட்டில் மாலினியின் அறைக்கே சென்று தங்கியுள்ளான். பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மாலினியின் தோழிகளைத் தொடர்புகொண்ட அவன், தான் மாலினியைக் கொன்றுவிட்டதாகவும், தானும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளான்.

காவல்துறையினர் மீட்பு: தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர், விடுதி அறையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த மாலினியின் சடலத்தை மீட்டுள்ளனர். அவர் கத்தரிக்கோல் மற்றும் டெஸ்டர் போன்ற கருவிகளால் கொடூரமாகக் குத்திக் கொல்லப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே அறையில் தற்கொலைக்கு முயன்று காயங்களுடன் கிடந்த அபிஜித்தை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அபிஜித், காதலி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஆண்களுடன் பேசி வந்ததால், ஊருக்கு வருவதற்கு முன்பே இந்தக் கொலையைச் செய்யத் திட்டமிட்டிருந்ததாகக் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளான்.

கௌஹாத்தியில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலுள்ள தடயங்களைச் சேகரித்தனர். மாலினியின் உடல் உடற்கூறாய்வுக்காகக் கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்