இந்திய விமானிகளுக்குக் கட்டாயப் போதைப்பொருள் பரிசோதனை தொடக்கம்!
தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் முதன்மை விமானி கஞ்சா போதையில் இருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானதைத் தொடர்ந்து, இந்திய விமானிகளுக்குக் கட்டாயப் போதைப்பொருள் பரிசோதனை முறையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கயுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தாய்லாந்தின் புக்கெட் நகரிலிருந்து 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் ஏர் இந்தியாவின் ‘ஏர்பஸ் ஏ320’ விமானம் டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தது. நடுவானில் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் 300 அடி உயரத்திற்குச் செங்குத்தாகக் கீழே இறங்கியது. இதில் பயணித்த 20 பயணிகளும், விமானப் பணிப்பெண் ஒருவரும் காயமடைந்தனர்.
விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் நடத்தப்பட்ட ஆய்வில், முதன்மை விமானி கஞ்சா போதையில் காக்பிட் அறையில் சுருண்டு கிடந்ததும், அவரால் சுயமாக நிற்கக்கூட முடியாமல் இருந்ததும் தெரியவந்தது. புக்கெட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்பே அந்த விமானி கஞ்சா பயன்படுத்தியதாக சக பணிப்பெண் ஒருவர் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா மற்றும் ஏஐ எக்ஸ்பிரஸ் நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து விமானிகளுக்கும் கட்டாயப் போதைப்பொருள் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் இன்று முதல் முறைப்படி தொடங்கப்பட்டுள்ளன. தற்போது இச்சம்பவம் குறித்து 'விமான விபத்து விசாரணை அமைப்பு' தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.