மங்களூரு MRPL ஆலையில் பயங்கர வெடிப்பு! ஒருவர் பலி; 8 பேர் காயம் - விசாரணை தீவிரம்
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தின் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.மங்களூரு அருகே ஜோகட்டே பகுதியில் செயல்பட்டு வரும் ஆலையின் Coker Hydrotreater Unit-ல் புதன்கிழமை மதியம் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிப்பைத் தொடர்ந்து ஆலையில் இருந்து கரும்புகை வெளியேறியதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
இந்த விபத்தில் மன்புரி பகுதியைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி மணீஷ் கர்கேரா உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தீ அணைக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியின்போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
மேலும் 8 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் ஆபத்தான நிலையில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
MRPL ஆலையில் அதிக அழுத்தத்தில் இயங்கி வந்த ‘Cold Separator’ கருவியில் ஏற்பட்ட கோளாறு அல்லது உடைப்பு காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், விபத்துக்கான சரியான காரணம் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.
சம்பவ இடத்தை கர்நாடக மந்திரி யு.டி. காதர் நேரில் பார்வையிட்டார். விபத்து குறித்து விசாரணை நடத்த மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.