சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்... மணிமுத்தாறு அருவியில்  2வது நாளாக குளிக்கத் தடை  !

 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் அருவிக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்வது வழக்கம்.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்ததை அடுத்து, கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்பாசமுத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைக் காடுகளில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்தத் தொடர் மழையினால் மணிமுத்தாறு அருவிக்கு வரும் நீர்வரத்து கணிசமாக உயர்ந்து, காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிக்குச் செல்லவும், அங்கு குளிக்கவும் வனத்துறையினர் நேற்று முதல் தடை விதித்திருந்த நிலையில், இன்றும் வெள்ளம் குறையாததால் 2-வது நாளாக இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.