மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக் கொண்டிருந்த போது ஐடி ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு!
பெங்களூரு அருகே உள்ள நந்தி மலையில் பருவமழை மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி நடைபெற்றது. பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் இளைஞர், விளையாட்டு நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில் 10 கி.மீ மற்றும் 21 கி.மீ பிரிவுகளில் 4,500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இப்பெருமிதப் போட்டியில் பெங்களூரு மன்யதா டெக் பார்க்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் பஞ்சாப்பைச் சேர்ந்த அமன்தீப் சிங் ஜக்டே (வயது 31) என்பவரும் பங்கேற்றார். இவர் 21 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டியில் ஓடியபோது, பாதி தூரம் கடந்த நிலையில் திடீரெனச் சரிந்து கீழே விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், அமன்தீப் சிங் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். மாரத்தானில் பங்கேற்ற தனியார் நிறுவன ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.