நீண்ட பட்ஜெட் உரை வாசித்த அமைச்சர்கள் பட்டியலில் மரிய வில்சன்!

 

தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிலையில், நீண்ட நேரம் பட்ஜெட் உரையை வாசித்த மாநில நிதியமைச்சர்களின் பட்டியலில் தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சனும் இணைந்துள்ளார்.

நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன், சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் (150 நிமிடங்கள்) தொடர்ச்சியாக பட்ஜெட் உரையைச் சட்டமன்றத்தில் வாசித்தார்.

இந்த நீண்ட உரையில் மாநிலத்தின் புதிய வளர்ச்சித் திட்டங்கள், முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அரசின் முக்கியக் கொள்கை முடிவுகள் விரிவாக இடம்பெற்றன.

தங்கம் தென்னரசுவின் சாதனை: தமிழகச் சட்டமன்ற வரலாற்றில் நீண்ட நேரம் பட்ஜெட் உரை வாசித்தவர்களில் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய இடம் பெற்றுள்ளார். இவர் 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையைச் சுமார் 2 மணி நேரம் 38 நிமிடங்கள் வாசித்தார்.

தற்போது நிதியமைச்சர் மரிய வில்சன் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் உரையாற்றியதன் மூலம், சட்டமன்றத்தில் அதிக நேரம் பட்ஜெட் உரையை வாசித்த அமைச்சர்களின் வரிசையில் கவனத்தைப் பெற்றுள்ளார்.