மெரினாவில் சுழற்சி முறையில் தூய்மை... 152 பணியாளர்கள் மற்றும் 9 நவீன இயந்திரங்கள் பயன்பாடு!
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற கடற்கரைப் பகுதிகளைப் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி சார்பில் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை மற்றும் திருவொற்றியூர் கடற்கரைப் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நவீன இயந்திரங்கள் கொண்டு நாள்தோறும் சுழற்சி முறைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை நகரின் முக்கிய அடையாளமாக விளங்கும் இந்த கடற்கரைகளைத் தூய்மையாகப் பராமரிக்கப் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைத் திட்டப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் நாள்தோறும் பெரும்பாலான பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர். மேலும், வார இறுதி நாட்களில் இங்கு வரும் மக்களை மகிழ்விப்பதற்காகப் பாரம்பரிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இந்த இடங்களைப் போர்க்கால அடிப்படையில் தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அதிநவீன இயந்திரங்கள் மூலம் நாள்தோறும் சுழற்சி முறையில் தூய்மைப் பணிகள் தடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்புத் தூய்மைப் பணிகளில் 3 சுழற்சி முறைகளில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என மொத்தம் 152 பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கடற்கரை மணற்பரப்பைச் சுத்தம் செய்யும் 9 அதிநவீன இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியின் இந்தத் தொடர் தூய்மை நடவடிக்கை காரணமாகக் கடற்கரைப் பகுதிகள் அனைத்தும் குப்பைகளின்றித் தூய்மையாகக் காட்சியளிப்பதுடன், இங்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளையும் பெருமளவில் கவர்ந்து வருகிறது.