வளைகுடா கடல்சார் பதற்றம்... இந்திய மாலுமிகளைப் பாதுகாக்க மத்திய அரசு முழு நடவடிக்கை.. அவசர உதவி எண்கள் அறிவிப்பு - 24 மணி நேரமும் கண்காணிப்பு!

 

வளைகுடா பிராந்தியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்வதேசக் கடல் வழித்தடங்களில் வேகமாக மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய மாலுமிகளின் உயிரைப் பாதுகாக்கவும், நாட்டின் கடல்சார் நலன்களைப் பேணவும் இந்திய அரசு பல்வேறு அதிரடிப் பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஹோர்முஸ் நீரிணை, ஓமான் வளைகுடா உள்ளிட்ட பதற்றம் நிறைந்த பகுதிகளில் உள்ள நிலவரங்களைத் 24 மணி நேரமும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

கடந்த ஜூன் 10ம் தேதி ஓமானின் சோஹார் நகருக்கு வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் சென்று கொண்டிருந்த, பலாவ் நாட்டின் கொடி ஏந்திய 'எம்.டி. செட்டபெல்லோ' என்ற நடுத்தர தூர எண்ணெய் வர்த்தகக் கப்பல் மீது திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தக் கப்பலில் 24 இந்தியர்கள் உட்பட மொத்தம் 28 பணியாளர்கள் இருந்தனர்.

இந்தத் கொடூரத் தாக்குதலில் முதற்கட்டமாகக் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 3 இந்திய மாலுமிகள் பரிதாபமாக உயிரிழந்தது, அவர்களின் உடல்கள் கண்டறியப்பட்டதன் மூலம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த மற்ற பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்ணியமான முறையில் தாயகம் கொண்டு வரவும், மீட்கப்பட்ட மற்ற மாலுமிகளை விரைவாகத் திருப்பி அனுப்பவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாலுமிகளின் குடும்பங்களுக்குத் துணையாக மோடி அரசு உறுதியுடன் நிற்கும் எனத் தெரிவித்துள்ள அவர், முதற்கட்ட நெறிமுறைகளின்படி மாலுமிகள் நலநிதி சங்கம் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி உடனடியாக விடுவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

வளைகுடாப் பகுதியில் அதிகரித்துவரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இதனால், மோதல் பாதிப்புள்ள கடல்வழிப் பாதைகள் வழியாகச் செல்லும் இந்திய மற்றும் வெளிநாட்டுக் கொடி ஏற்றப்பட்ட கப்பல்களில் பணியாற்றும் அனைத்து இந்திய மாலுமிகளும் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் செயல்படுமாறு கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

கப்பல் நிறுவனங்கள் மற்றும் மேலாளர்கள் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாலுமிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவ 24 மணி நேரமும் செயல்படும் அவசரகாலத் தகவல் தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏதேனும் அவசர உதவி அல்லது தகவல்களுக்கு மாலுமிகளும் அவர்தம் குடும்பத்தினரும் பின்வரும் அதிகாரப்பூர்வ வழிகளில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல்: dgcommcentre-dgs@nic.in / enavik.24x7@gov.in | வாட்ஸ்அப் / அழைப்பு எண்: +91 8657549760 / +91 8655856830 | மாற்று எண்கள்: +91 2222613606, +91 8657549752 | கட்டணமில்லா எண் (உள்நாட்டு): 1800-889-7768 | சர்வதேச கட்டணமில்லா எண்: +1-888-988-0256