உறவினர்களிடையே திருமணம் செய்யத் தடை... சுவீடன் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றம்!
ஐரோப்பிய நாடான சுவீடனில் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உற்றுநோக்க வைக்கும் வகையிலான சட்டம் நாடாளுமன்றத்தில் முறைப்படி நிறைவேற்றப்பட்டுள்ளது. பல நாடுகளிலும், குறிப்பாக ஆசிய கலாச்சாரங்களிலும் ரத்த சொந்தங்களுக்குள் அல்லது நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் செய்து கொள்ளும் நடைமுறை காலம் காலமாக இருந்து வருகிறது.
ஆனால், இத்தகைய நெருங்கிய சொந்தங்களுக்குள் நடைபெறும் திருமணங்கள் காரணமாகப் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்குப் மரபணுக் குறைபாடுகள், தீர்க்க முடியாத பரம்பரை நோய்கள் ஏற்படுவதாகப் பல்வேறு மருத்துவ ஆய்வுகளில் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, குடும்ப வற்புறுத்தல் காரணமாகப் பல இளம் பெண்களுக்குக் கட்டாயத் திருமணங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இத்தகைய சமூக மற்றும் மருத்துவ விபரீதங்களுக்குப் போர்க்கால அடிப்படையில் முற்றுப்புள்ளி வைக்கச் சுவீடன் அரசு களம் இறங்கியுள்ளது.
நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதை முற்றிலும் தடை செய்யும் மசோதாவைச் சுவீடன் நாட்டு நாடாளுமன்றம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய சட்டமானது வரும் ஜூலை 1-ம் தேதி முதல் சுவீடன் நாடு முழுவதும் அதிகாரபூர்வமாக அமலுக்கு வரவுள்ளது.
இந்தச் சட்டத்தில் உள்ள மிக முக்கிய அம்சமாக, சுவீடன் அரசின் இந்தத் தடையை ஏமாற்றும் நோக்கில், யாராவது வெளிநாடுகளுக்குச் சென்று தங்களது நெருங்கிய சொந்தங்களுக்குள் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு, அதன் பின்னர் தங்களது கணவன் அல்லது மனைவிக்குச் சுவீடன் நாட்டின் குடியுரிமை விசா பெற முயன்றால், அவர்களின் விசா விண்ணப்பம் எவ்விதப் பரிசீலனையுமின்றி உடனடியாக நிராகரிக்கப்படும் என்று சுவீடன் உள்நாட்டுத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஏற்கனவே சுவீடனின் அண்டை நாடான நார்வேயில் இத்தகைய சொந்தங்களுக்குள் திருமணத் தடைச் சட்டம் வெற்றிகரமாக இயற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது நார்வேவைத் தொடர்ந்து சுவீடனும் இந்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. ஐரோப்பியக் கண்டத்தில் அடுத்தடுத்து இரு நாடுகள் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, உலகளாவிய அளவில் பாரம்பரியத் திருமண முறைகள் குறித்த புதிய விவாதத்தை அரசியல் மற்றும் சமூக தளங்களில் பலமாகக் கிளப்பியுள்ளது.