சிறுமி பருவமடைந்ததும் திருமணம் செய்ய அனுமதிக்கும் தனிநபர் சட்டம் செல்லாது... உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களுக்கு முன்னால் எந்தவொரு மதத்தின் தனிநபர் சட்டங்களும் செல்லுபடியாகாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் மிக முக்கியமான அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. குறிப்பாக, முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி (ஷாரியத்) ஒரு சிறுமிபருவமடைந்தவுடன் (பொதுவாக 15 வயது) அவளுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்ற நடைமுறை, நாட்டில் அமலில் உள்ள குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ (POCSO) சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி கடுமையான குற்றமாகும்.
உத்தரப் பிரதேச மாநிலம் புலாந்த்சாஹரில், 16 வயது முஸ்லிம் சிறுமி ஒருவருக்கு நடத்தவிருந்த குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்தச் சென்ற போலீசார் மற்றும் சைல்டு லைன் அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தங்களுக்கு எதிரான இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.ஜே.முனீர் மற்றும் அச்சலசச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்து இந்த அதிரடித் தீர்ப்பை அளித்துள்ளது. நாட்டின் பொது நலன் மற்றும் பொதுச் சுகாதாரத்தின் அடிப்படையில் இயற்றப்பட்ட குழந்தை திருமண தடைச் சட்டம் 2006, மதக் கோட்பாடுகளைக் கடந்து நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகப் பொருந்தும் என நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் விளக்கியுள்ளனர்.
மேலும், 18 வயதிற்குட்பட்ட ஒரு சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்கும் போது அங்கு உடலுறவு என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது என்றும், இது போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமிகளுக்கு எதிரான கடுமையான பாலியல் குற்றமாகவே கருதப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கேரள உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய முற்போக்கான தீர்ப்பை வழிமொழிந்த நீதிபதிகள், அறிவியல் பூர்வமான புரிதல்களுடன் உருவாக்கப்பட்ட இத்தகைய தடைச் சட்டங்களில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். குழந்தை திருமணத்தைத் தடுக்கச் சென்ற அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர்கள் மீதான புகாரில் முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதால், போலீசார் தங்களின் விசாரணையைத் தீவிரமாகத் தொடரலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.