போலிச் சாமியார் லீலைகள்... முதல் மனைவி உயிருடன் இருக்கையில் விமானப் பொறியியல் பட்டதாரி உட்பட 2 பேருடன் திருமணம் !
செங்குன்றம் அருகே பொத்தூர், வள்ளிவேலன் நகரைச் சேர்ந்த 43 வயது சாந்தகுமார் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு 40 வயதில் கவுசல்யா என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தனது மனைவிக்குத் தெரியாமல் ஏராளமான பெண்களுடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்ததுடன், கடந்த 2017 ல் மற்றொரு பெண்ணை 2 வது திருமணமும் செய்துள்ளார். பின்னர் 2 வது மனைவி பிரிந்து செல்லவே, கடந்த 2022 ல் முதல் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுப் பொத்தூர் பகுதிக்குக் குடிபெயர்ந்து அங்குப் போலிச் சாமியாராகக் குறி சொல்லத் தொடங்கியுள்ளார்.
கோயிலுக்கு வரும் இளம்பெண்களை ஏமாற்றி வந்த போலிச் சாமியார் சாந்தகுமார், கடந்த ஏப்ரல் மாதம் தன்னிடம் குறி கேட்க வந்த விமானப் பொறியியல் (ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்) படித்த 22 வயதான இளம்பெண்ணை ஏமாற்றி 3 வது முறையாக ரகசியத் திருமணம் செய்துள்ளார். இந்தத் திடுக்கிடும் உண்மை வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, முதல் மனைவி கவுசல்யா தனது கணவருக்கு எதிராக ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முறைப்படி பரபரப்புப் புகார் ஒன்றை அளித்தார்.
முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, அவரிடம் எவ்வித விவாகரத்தும் பெறாமல் அடுத்தடுத்து 2 பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியதாகப் போலிச் சாமியார் மீது 3 குற்றப்பிரிவுகளின்கீழ் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்துத் தலைமறைவாக இருக்க முயன்ற போலிச் சாமியார் சாந்தகுமாரை நேற்று மாலை போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் தனது அனைத்துக் குற்றங்களையும் அப்பட்டமாக ஒப்புக்கொண்டதை அடுத்து அவரிடம் மேல் விசாரணை நீடிக்கிறது.