“நடிகரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்கேயே இருந்துடுங்க!” - மிருணாளுக்குத் தயாரிப்பாளர் ‘அன்புக் கட்டளை’!

 

'சீதா ராமம்' படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்த பாலிவுட் மங்கை மிருணாள் தாகூர், இப்போது தென்னிந்தியாவின் 'லக்கி மேஸ்கட்' ஆக மாறிவிட்டார். அவரது நடிப்பில் வெளியாகியுள்ள 'டகோயிட்' படத்தின் வெற்றி விழாவில், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அவருக்கு விடுத்த வேண்டுகோள் இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வெற்றி விழாவில் மேடையில் பேசிய அந்தத் தயாரிப்பாளர், மிருணாள் தாகூரின் நடிப்பையும், அர்ப்பணிப்பையும் வெகுவாகப் பாராட்டினார். தொடர்ந்து பேசுகையில், "மிருணாள் தாகூர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் இன்னும் அதிகமாக நடிக்க வேண்டும். அதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது; அவர் ஒரு தென்னிந்திய நடிகரையே திருமணம் செய்து கொண்டு இங்கேயே செட்டில் ஆகிவிட வேண்டும்" என நகைச்சுவையாகக் கூறினார்.

இதைக் கேட்டு மேடையிலேயே மிருணாள் தாகூர் வெட்கத்தில் சிரித்தது அங்கிருந்தவர்களையும் ரசிக்க வைத்தது.

தயாரிப்பாளர் இப்படிப் பேசியதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான பின்னணியும் உண்டு. சமீபத்தில் மிருணாள் தாகூர் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரை இணைத்துச் சில வதந்திகள் பரவின. அந்தத் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திதான் என்று மிருணாள் ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இருப்பினும், தென்னிந்திய ரசிகர்கள் அவர் இங்கேயே தங்கித் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புவதையே தயாரிப்பாளரின் இந்தப் பேச்சு பிரதிபலிப்பதாகப் பார்க்கப்படுகிறது.

பாலிவுட்டை விடத் தற்போது தென்னிந்தியாவில்தான் மிருணாளுக்குக் கூடுதல் வரவேற்பு கிடைத்து வருகிறது. இவரது கால்ஷீட்டுக்காகப் பல முன்னணி நடிகர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.