மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… 2 நாட்கள் வாகனங்களுக்கு தடை!
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் மலைப்பாதையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருதமலை கோவிலில் கந்த சஷ்டி விழா நவம்பர் 10-ம் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 15-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. மறுநாள் நவம்பர் 16-ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இரண்டு நாட்களிலும் பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், கோவில் நிர்வாகம் இயக்கும் பேருந்துகள் மூலமாகவும் மலைக்கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன