மசாஜ் சென்டரில் மாமுல் வசூல் - பெண் எஸ்.ஐ., பெண் சிறப்பு எஸ்.ஐ. கைது!

 

சென்னை புறநகர்ப் பகுதியில் மசாஜ் சென்டர் உரிமையாளரை மிரட்டி லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உயர் காவல் அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் பெண் உரிமையாளரிடம் மாதாந்திர மாமுல் தொகையாக லஞ்சம் வாங்கிய பெண் சிறப்புச் சார்பு ஆய்வாளர் மற்றும் பெண் சார்பு ஆய்வாளர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆவடி மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில் ஜெனிபர் என்பவர் மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அங்குப் பணியில் இருந்த பெண் காவல் அதிகாரிகள் இவரிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மசாஜ் சென்டரில் சட்டவிரோதச் செயல்கள் நடப்பதாகக் கூறி, நிலையத்தை மூடிவிடுவோம் எனப் பெண் சிறப்புச் சார்பு ஆய்வாளர் அமுல் மற்றும் சார்பு ஆய்வாளர் பாக்கியலட்சுமி ஆகியோர் ஜெனிபரை மிரட்டியுள்ளனர்.

ஸ்பாவைத் தொடர்ந்து எவ்விதத் தொந்தரவும் இன்றி நடத்த வேண்டுமானால், தங்களுக்கு மாதந்தோறும் ₹50,000 மாமுல் தொகையாக லஞ்சம் தர வேண்டும் என அவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத மசாஜ் சென்டர் உரிமையாளர் ஜெனிபர், இதுகுறித்துத் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ரகசியப் புகார் அளித்தார். அதிகாரிகளின் ஆலோசனையின்படி, முதற்கட்டத் தவணையாக ₹20,000 பணத்தில் ரசாயனப் பொடி தடவப்பட்டு, அதனை ஜெனிபர் மூலமாகப் பெண் காவல் அதிகாரிகளிடம் கொடுக்கத் திட்டமிடப்பட்டது.

இன்று மதியம், திருமுல்லைவாயில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து ஜெனிபரிடமிருந்து ரசாயனம் தடவப்பட்ட ₹20,000 பணத்தைப் பெண் சிறப்பு எஸ்.ஐ. அமுல் மற்றும் எஸ்.ஐ. பாக்கியலட்சுமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அப்போது, அங்குச் சாதாரண உடையில் மறைந்திருந்த திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், இருவரையும் அதிரடியாகச் சூழ்ந்து கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களின் கைகளை வேதித் திரவத்தில் நனைத்துச் சோதனை செய்தபோது, அவர்கள் லஞ்சப் பணம் வாங்கியது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், பெண் அதிகாரிகள் இருவரையும் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பெண் காவல் அதிகாரிகளே மாமுல் கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய சம்பவம் சென்னை மற்றும் திருவள்ளூர் காவல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.