பெங்களூருவில் பிளாஸ்டிக் மறுசுழற்சி கிடங்கில் பயங்கர தீ விபத்து... 10 கிலோமீட்டர் தூரம் தெரிந்த கரும்புகையால் மக்கள் பீதி!
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர்ப் பகுதியான ராம்புராவில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. கோல்ஃப் வில்லேஜ் அருகே அமைந்துள்ள இந்த கிடங்கில் ஏற்பட்ட தீயினால், வானம் முழுவதும் அடர்த்தியான கரும்புகை சூழ்ந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு வரை காட்சியளித்ததால் பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. எளிதில் தீப்பற்றக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் டன் கணக்கில் கொட்டிக் கிடந்ததால், தீ மளமளவென பரவி கட்டுக்கடங்காமல் எரியத் தொடங்கியது.
தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். தொட்டகுப்பி கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட இந்தப் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் இருந்ததால், கரும்புகை காரணமாக மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வீடுகளை விட்டு வெளியேறினர். தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், கிடங்கில் இருந்த மறுசுழற்சிப் பொருட்களே தீ விபத்து இவ்வளவு மோசமாக மாறக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெகுதொலைவில் இருந்தே வானில் உயர்ந்தெழுந்த கருப்புப் புகையைப் பார்க்க முடிந்ததாக அந்தப் பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். விபத்து நடந்த கிடங்கு அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்தப் பயங்கர விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.