மத்திய ஆப்பிரிக்காவில் பயங்கர நிலச்சரிவு... தங்கச் சுரங்க விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

 

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் காமரூன் எல்லை அருகே உள்ள சாம்போய் கிராமத்தில் இயங்கி வந்த சட்டவிரோதத் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பாபுவா நகரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள சாம்போய் பகுதியில் அமைந்திருந்த திறந்தவெளித் தங்கச் சுரங்கத்தில், நிலத்தடிச் சுரங்கப் பாதைகள் திடீரென அடுத்தடுத்து இடிந்து விழுந்ததால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பெரிய அளவிலான மண் சரிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சம்பவ இடத்திலேயே மண்ணுக்குள் புதைந்தனர்.

தகவலறிந்து வந்த உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு இதுவரை 30-க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டுள்ள நிலையில், படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம், சுரங்கத்தை இயக்கியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க விசாரணை உத்தரவிட்டுள்ளது. மண்ணுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.