சீனாவில் பயங்கர நிலச்சரிவு - 8 பேர் பலி; 34 பேர் இடிபாடுகளில் சிக்கி மாயம் - மீட்பு பணிகள் தீவிரம்!

 

தென்மேற்கு சீன பெருநகரமான சோங்கிங்கின் புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவில் சிக்கி, 42 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 34 பேரைக் காணவில்லை என உள்ளூர் அதிகாரிகளும் அரசு ஊடகங்களும் தெரிவித்துள்ளன. இந்த இயற்கை பேரிடரால் குடியிருப்பு கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்துள்ள நிலையில், 1,100-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சோங்கிங் நகராட்சியின் வெளி எல்லையில் அமைந்துள்ள பெங்ஷுய் கவுண்டியில், நேற்று வெள்ளிக்கிழமை காலை சுமார் 9:08 மணியளவில் இந்த கோர நிலச்சரிவு ஏற்பட்டது. சிறு நகரங்களும் மேட்டு நிலங்களும் நிறைந்த சுண்ணாம்பு மலைகளை ஊடறுத்துச் செல்லும் வூஜியாங் ஆற்றின் ஒரு பகுதிக்கு அருகே, பெய்த கனமழையின் காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையின் மேலிருந்து பெருமளவிலான பாறைகளும் மண்ணும் சரிந்து கீழே இருந்த 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்களை அப்படியே மூடிப் புதைத்தன. ஐந்து முதல் பதினைந்து மாடிகள் கொண்ட சில கட்டிடங்கள் சேதமடைந்த நிலையிலும் இடிபாடுகளுக்கு இடையே நின்று கொண்டிருக்கின்றன.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/sH6-a-I3aik?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/sH6-a-I3aik/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் 800-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆரஞ்சு நிற உடை அணிந்த மீட்புப் பணியாளர்கள் அகழ்வு இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளைத் தோண்டித் தேடி வருகின்றனர். இதுவரை இடிபாடுகளில் இருந்து 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் இருவர் பலத்த காயமடைந்துள்ளதால் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கோர விபத்து குறித்துத் தீவிர கவலை தெரிவித்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், பேரிடருக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மலைச்சரிவின் ஒரு பகுதி சரிந்து விழுந்த இடத்தில் நிலையற்ற நிலப்பரப்பு காணப்படுவதாலும், மீண்டும் மற்றொரு நிலச்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் நீடிப்பதாலும் மீட்புப் பணிகள் கடும் சவால்களுக்கு இடையே தடைபட்டுத் தொய்வடைந்துள்ளன. மேலும் அசம்பாவிதங்கள் மற்றும் இடையூறுகளைத் தடுப்பதற்காக, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் (0.6 மைல்) சுற்றளவில் தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகம் உடனடியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெங்ஷுய் மாவட்ட மக்களுக்கு உதவுவதற்காகச் சீன மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் இணைந்து 8,000-க்கும் மேற்பட்ட பேரிடர் நிவாரணப் பொருட்களை அவசரமாக அனுப்பியுள்ளனர். இதில் தற்காலிகமாகக் தங்குவதற்கான கூடாரங்கள், மடிக்கக்கூடிய படுக்கைகள் மற்றும் குடும்ப அவசரக்கால மருத்துவப் பெட்டிகள் உள்ளிட்டவை அடங்கும். காணாமல் போன 34 பேரைத் தேடும் பணி தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.