விமானத்தில் சுய இன்பம்... பெண் பயணிக்குத் தொல்லை - ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எதிராகப் புகார்!
அமெரிக்காவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இளம்பெண் ஒருவர், தன்னுடன் சக பயணியாக அமர்ந்திருந்த நபர் பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். விமானப் பணிக்குழுவினர் உரிய நேரத்தில் உதவவில்லை என்றும் அவர் புகார் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் குழந்தைகள் மனநல நிபுணராகப் பணிபுரியும் 25 வயதுடைய பெண் ஒருவர், நெவார்க் நகருக்குச் செல்வதற்காக யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அருகில் அமர்ந்திருந்த சக பயணி தன்னைத் தொடர்ந்து உற்றுப் பார்த்ததுடன், தவறான முறையில், சுய இன்பம் அனுபவித்து மிக மோசமாக நடந்து கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விமானப் பயணத்தின் போது இது குறித்து உடனடியாக விமானப் பணிக்குழுவினரிடம் முறையிட்ட போதிலும், இருக்கையை மாற்றிக் கொடுக்க அவர்கள் மறுத்துவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் வேதனை தெரிவித்துள்ளார். விமானம் தரையிறங்கியதும் சம்பந்தப்பட்ட நபர் மீது எந்தவிதமான உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அங்கிருந்து தப்ப அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள ஏர்லைன்ஸ் நிறுவனம், பயணிகளின் பாதுகாப்பே தங்களுக்கு முதன்மையானது என்றும், இதுதொடர்பான தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.