அரசு பெண் ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு!
சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அரசுப் பெண் ஊழியர்களின் 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் (1 ஆண்டு) ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் எனத் துறை அமைச்சர் சரத்குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அரசுப் பெண் பணியாளர்களின் 3-வது குழந்தைக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 12 வார மகப்பேறு விடுப்பு, இனி 365 நாட்களாக (1 ஆண்டு) உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.
அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ரூ.2 லட்சம் செலவில் 'வெற்றிப் பாதை' என்னும் சிறப்புச் செயலி உருவாக்கப்படும். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் சமூக ஊடகக் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.
பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் ரூ.1 கோடி செலவில் கணினி ஆய்வகமும், ரூ.2.25 கோடி மதிப்பில் திறந்தவெளி விளையாட்டு அரங்கமும் ஏற்படுத்தப்படும். அரசுச் சேவைகள், உரிமங்கள், சான்றிதழ்கள் மற்றும் தடையின்மைச் சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறைகளைப் பொதுமக்களுக்கு எளிமையாகவும் விரைவாகவும் மாற்ற 'எளிமை ஆளுமை' திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.