டெல்லி ஹோட்டல் தீ விபத்தில் 8 பேரை காப்பாற்றிய மெத்தை கடைக்காரர் - ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிப் பாராட்டு!
டெல்லி மால்வியா நகரில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்த சோகம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தனது உயிரைப் பற்றிய கவலையில்லாமல் சாதுரியமாகச் செயல்பட்டு, ஜன்னல் வழியே குதித்த 8 பேரின் உயிரைக் காப்பாற்றிய மெத்தை கடைக்காரர் ரியாசுதீனின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
டெல்லியின் மால்வியா நகரில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் திடீரென படுபயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஓட்டல் சமையல்காரரின் அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் மற்றும் சமையல்காரர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
விபத்தின் போது ஓட்டலின் அடித்தளத்தில் தீ மளமளவெனப் பிடித்து எரிந்ததால், கட்டடத்திற்குள் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் அங்கும் இங்கும் ஓடி அலறினர். புகை மூட்டம் சூழ்ந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் கட்டடத்திற்குள்ளேயே மயங்கி விழுந்தனர். வேறு வழியின்றி தங்களைக் காப்பாற்றிக் கொள்ளச் சிலர் ஓட்டலின் மேல் தளத்தில் உள்ள ஜன்னல்கள் வழியாகக் கீழே குதிக்க முயன்றனர்.
ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டு மக்கள் ஜன்னல் வழியே குதிக்க முயல்வதைக் கண்ட ஓட்டலின் எதிரே மெத்தை கடை வைத்திருந்த ரியாசுதீன் என்பவர், நொடிப் பொழுதும் யோசிக்காமல் களத்தில் இறங்கினார். மேலிருந்து கீழே விழுபவர்களுக்குக் கடுமையான காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படாமல் இருக்க, தனது கடையிலிருந்த விலை உயர்ந்த புதிய மெத்தைகளைச் சாலையில் அடுத்தடுத்து பரப்பினார்.
சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மெத்தைகளை அவர் சாலையில் பரப்பியதன் மூலம், மேல் தளத்தில் இருந்து கீழே குதித்த 8 பேர் எவ்விதக் காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாகப் பத்திரமாக உயிர் தப்பினர்.
தனது கடையிலிருந்த மெத்தைகள் பாழாகும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், 8 மனித உயிர்களைக் காப்பாற்றிய ரியாசுதீனின் இந்த உன்னதமான மனிதநேயச் செயலைப் பாராட்டி, டெல்லி அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் அவருக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
அதன் முதற்கட்டமாக, ரியாசுதீனின் இந்தச் சாதுரியமான மீட்புப் பணியைப் பாராட்டி அவருக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களிலும் மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபித்த ரியாசுதீனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.