“மக்களிடையே மனிதநேயமும் நல்லிணக்கமும் வளரட்டும்...” - முதல்வர் விஜய் பக்ரீத் வாழ்த்து!

 

ஈகை மற்றும் தியாகத் திருநாளாக கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இறைவனின் கட்டளையை ஏற்றுத் தனது ஒரே மகனையே தியாகம் செய்யத் துணிந்த இப்ராகிம் நபிகளின் உன்னதமான தியாக வாழ்வை நினைவு கூரும் நன்னாளாக இந்தத் திருநாள் அமைகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உன்னதமான தியாகத் திருநாளில் நமது சமூகத்தில் தொன்றுதொட்டு நீடித்து வரும் மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் மத நல்லிணக்கம் ஆகிய உயரிய பண்புகள் மக்களிடையே மேலும் பல மடங்கு தழைத்தோங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள விஜய் தனது, ஏழை எளிய மக்களின் பசியறிந்து அவர்களுக்கு இன்முகத்துடன் உணவளித்துக் கொடைத்தன்மையைப் பகிர்ந்து மகிழும் இஸ்லாமியர்களின் நற்பண்பு ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஒரு மிகச் சிறந்த வழிகாட்டியாகும் என்று பாராட்டியுள்ளார்.

சுயநலமற்ற தியாகமும், பிறர் மீதான அளவுகடந்த அன்பும் மட்டுமே இந்த உலகை அமைதிப் பாதையில் முன்னோக்கி எடுத்துச் செல்ல உதவும் என்பதால், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சகோதரத்துவத்துடன் வாழ இந்த நன்னாளில் உறுதியேற்போம் என்று முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவரின் வாழ்விலும் என்றும் வற்றாத மகிழ்ச்சியும், அமைதியும், தடையற்ற ஆரோக்கியமும் நிலைபெற வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.