“இனி உறவினர்களுக்கு கட்சியில் எந்தப் பதவியும் கிடையாது” - மாயாவதி அதிரடி அறிவிப்பு!

 

பகுஜன் சமாஜ் கட்சியில் குடும்ப உறுப்பினர்களுக்கு இனி எந்த விதமான அரசியல் பதவிகளும் வழங்கப்படாது என்று அக்கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனத் தலைவர் கன்ஷிராம் வழியைப் பின்பற்றி, தனது சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களை அரசியல் பதவிகளில் இருந்து விலக்கி வைத்துள்ளதாக மாயாவதி தெரிவித்தார்.

சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தனது சகோதரர் ஆனந்த் குமாரின் மகன்களான ஆகாஷ் ஆனந்த் மற்றும் ஈஷான் ஆனந்த் ஆகிய இருவருக்கும் இனி கட்சியில் எந்த அரசியல் பொறுப்பும் வழங்கப்படாது என்றும், இதுவே தனது இறுதியான முடிவு என்றும் அவர் லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தனது சகோதரர் ஆனந்த் குமார் தனக்கு உதவியாகக் கட்சிப் பணிகளைக் கவனித்து வந்தாலும், அவரது குடும்பத்தினர் அந்த உறவை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது கட்சிக்கு நல்லதல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

தனது உடல்நிலை குறித்துத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் கட்சியினர் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தான் முழு நல்வாழ்வுடன் இருப்பதாகவும், தொடர்ந்து கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் மாயாவதி தெளிவுபடுத்தினார்.