மயிலாடுதுறை: வீட்டின் ஓட்டைப் பிரித்து மூதாட்டியிடம் முகமூடி கொள்ளையன் கைவரிசை - 7.5 சரவன் செயின், ரூ.50,000 பணம் கொள்ளை!

 

மயிலாடுதுறை மாவட்டம் கோமல் பாடகச்சேரி கிராமத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வீட்டின் ஓட்டைப் பிரித்து நள்ளிரவில் உள்ளே நுழைந்த முகமூடி கொள்ளையன் ஒருவர், நகைகள் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் கோமல் பாடகச்சேரி பகுதியில் மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். நள்ளிரவு நேரத்தப் பயன்படுத்திக் கொண்ட முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர், வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே புகுந்துள்ளார். அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மூதாட்டியை மிரட்டியதுடன், அவரது கழுத்தை நெரித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

பயந்துபோன மூதாட்டியிடம் இருந்து அவரிடம் இருந்த 7.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.50,000 ரூபாய் ரொக்கத்தைப் பறித்துக்கொண்டு அந்த நபர் தப்பியோடியுள்ளார்.

தனியாக வசிக்கும் மூதாட்டியை இலக்காகக் கொண்டு நடைபெற்ற இந்தத் துணிகரக் கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணல்மேடு காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கொள்ளையனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.