குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள்? மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்!
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள பன்னீர்வெளி கிராமத்தில், பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கொட்டப்பட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தொட்டியின் மீது மனிதக் கழிவுகள் கிடந்ததைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
அதிகாரிகள் விசாரணை
தகவலறிந்த போலீசாரும், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தொட்டியில் கழிவுகள் கொட்டப்பட்டது எப்படி, இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பொதுமக்களின் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.