சென்னையில் எம்பிபிஎஸ் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை; காவல்துறை தீவிர விசாரணை!

 

சென்னை அருகே திருப்போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரியாஸ்ராய் (24) என்ற மாணவி, சென்னை அடுத்த திருப்போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரிக்கு அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கிப் படித்து வந்த நிலையில், நேற்று தனது அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவியின் மரணம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற எம்பிபிஎஸ் தேர்வில் மாணவி ரியாஸ்ராய் 2 பாடங்களில் தேர்ச்சி பெறாததால் தீவிர மன உளைச்சலிலும் கவலையிலும் இருந்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. தேர்வில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட மன அழுத்தமே தற்கொலைக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் குடும்பக் காரணங்களா என்பது குறித்துக் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.