இன்று தமிழ்நாட்டில் இறைச்சி, டாஸ்மாக் கடைகள் இயங்காது!
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று அக்டோபர் 2ம் தேதி தேசிய விடுமுறை மற்றும் சர்வதேச அகிம்சை நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் இறைச்சி விற்பனை மற்றும் மதுபானக் கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட அனைத்து வகையான இறைச்சி விற்பனைக் கடைகளும் மற்றும் வதைக்கூடங்களும் இன்று செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பனை செய்தால் இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட கடைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதைகளின்படி, அனைத்து டாஸ்மாக் கடைகளும், அவற்றுடன் இணைக்கப்பட்ட பார்கள் மற்றும் எப்.எல். உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கூடங்களும் இன்று முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
விடுமுறை தினமான இன்று சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர்.