வேட்புமனு நிராகரிப்பு - உச்ச நீதிமன்றத்தில் மீனாட்சி நடராஜன் அவசர மனு தாக்கல்!

 

மத்திய பிரதேச மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் களம் இறங்கிய முன்னாள் எம்பி மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது, தேசிய அளவில் பெரும் அரசியல் மற்றும் சட்ட விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தேர்தல் அதிகாரியின் இந்த அதிரடி முடிவை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஜூன் 12-ம் தேதி விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 18 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு பரிசீலனையின்போது, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒரு முக்கியப் புகார் அளிக்கப்பட்டது. தெலங்கானா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு சிவில் மற்றும் குற்றவியல் விசாரணை தொடர்பான விவரங்களை மீனாட்சி நடராஜன் தனது தேர்தல் சத்தியப் பிரமாணப் பத்திரத்தில் (Form 26) திட்டமிட்டு மறைத்துவிட்டார் என்று பாஜக குற்றம் சாட்டியது.

இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட தேர்தல் நடத்தும் அதிகாரி, வேட்புமனு முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறி மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை அதிரடியாக நிராகரித்தார். இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் வாய்ப்பை இழக்கும் இக்கட்டான சூழல் உருவானது.

தேர்தல் அதிகாரியின் இந்த உத்தரவு சட்டவிரோதமானது என்று கூறி காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார். தெலங்கானா விவகாரம் என்பது வெறும் நீதிமன்ற நோட்டீஸ் மட்டுமே என்றும், அங்கு மீனாட்சி நடராஜன் மீது எந்தவொரு எஃப்.ஐ.ஆர் பதிவோ அல்லது முறையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவோ இல்லை என்றும் அவர் வாதிட்டார்.

தேர்தல் விதிமுறைகளின்படி, நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாத ஒரு பூர்வாங்க விசாரணையை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று சுட்டிக்காட்டிய சிங்வி, தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரினார்.

இந்த அவசர வழக்கைப் பரிசீலித்த நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் அதுல் சந்துர்கர் அடங்கிய அமர்வு, தேர்தல் நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், நீதிமன்றம் இதில் தற்போதைக்குத் தலையிட்டுத் தேர்தலை நிறுத்த முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இருப்பினும், இந்த மனுவின் சட்டப்பூர்வத் தன்மை மற்றும் வேட்புமனு நிராகரிப்பின் பின்னணி குறித்து விரிவாக ஆராய வேண்டியுள்ளதால், ஜூன் 12, வெள்ளிக்கிழமை அன்று இந்த வழக்கின் முக்கிய விசாரணையை மேற்கொள்ள நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்திடமும் இதுகுறித்த விளக்கங்கள் கேட்கப்படலாம் என்று தெரிகிறது.