பெய்ஜிங்கில் மெகா கார் திருவிழா - 1,451 கார்கள் அணிவகுப்பு... பறக்கும் கார்கள், 'ஏஐ' மின்காந்த வாகனங்கள் கலக்கல்!

 

"எதிர்பால நுண்ணறிவு" (Driving the Era - Smart Future) என்ற மையக்கருத்தில், பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் 2026 சர்வதேச வாகனக் கண்காட்சி, உலகின் மிகப்பெரிய வாகனக் கண்காட்சியாக உருவெடுத்துள்ளது. சுமார் 3.8 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில், வாகன உலகின் எதிர்காலம் கண்முன்னே விரிந்து நிற்கிறது.

இக்கண்காட்சியில் ஒட்டுமொத்தமாக 1,451 வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பல சிறப்பம்சங்கள் கார் பிரியர்களை ஈர்த்து வருகின்றன: 181 புதிய ரகக் கார்கள் முதல்முறையாக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், எதிர்காலத் தேவையை ஒட்டி 71 கான்செப்ட் கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

எக்ஸ்பெங் நிறுவனம் தனது 'லேண்ட் ஏர்கிராஃப்ட் கேரியர்' என்ற பறக்கும் காரையும், 'அயன்' என்ற மனித உருவ ரோபோட்டையும் அறிமுகப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வோக்ஸ்வாகன் போன்ற முன்னணி நிறுவனங்கள், டிரைவர் இல்லாமல் இயங்கும் ஏஐ ஏஜெண்ட்டுகள் கொண்ட கார்களைப் காட்சிப்படுத்தியுள்ளன.

சீனாவின் உள்நாட்டு நிறுவனங்களான பி.ஒய்.டி, சியோமி, மற்றும் நியோ ஆகியவற்றுடன் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஃபோர்டு போன்ற சர்வதேச ஜாம்பவான்களும் தங்களது அதிநவீன எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் கார்களை அணிவகுக்கச் செய்துள்ளனர். 500-க்கும் மேற்பட்ட புதிய எரிசக்தி வாகனங்கள் இக்கண்காட்சியின் மையப்புள்ளியாக உள்ளன.

பி.ஒய்.டி நிறுவனத்தின் புதிய பிளேட் பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் 'பிளாஷ் சார்ஜிங்' வசதி கொண்ட கார்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அதிநவீன தொழில்நுட்பம் ஒருபுறம் இருந்தாலும், பாரம்பரியமான வின்டேஜ் கார்களும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சொகுசு கார்களும் இளைய தலைமுறையினரைச் செல்ஃபி எடுக்கத் தூண்டுகின்றன. வரும் மே 3-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில், பல லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.