தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் பிரம்மாண்ட கப்பல் கட்டுமானத் தளம் - 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

 

தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு மைல்கல்லாக, தூத்துக்குடியில் ரூ. 38,000 கோடி முதலீட்டில் பிரம்மாண்டமான கப்பல் கட்டுமானத் தளம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன. இத்திட்டத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 15,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளது, தென் மாவட்ட இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை, உலகப் புகழ்பெற்ற HD KSOE நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர். இந்நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் யங் ஹூன் குவான் தலைமையிலான தூதுக்குழுவினர், தூத்துக்குடியில் அமையவுள்ள இந்த அதிநவீன கப்பல் கட்டும் தளத்தின் திட்ட வரைவு, சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் உள்கட்டமைப்புத் தேவைகள் குறித்து முதலமைச்சருடன் விரிவான ஆலோசனை நடத்தினர்.

மெகா முதலீடு: சர்வதேசத் தரத்திலான கப்பல்களைக் கட்டுவதற்கும், பழுதுபார்ப்பதற்கும் ஏதுவாக ரூ. 38,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் இத்திட்டத்தில் ஈர்க்கப்படவுள்ளன. சர்வதேசக் கடல் வர்த்தகப் பாதைக்கு அருகில் அமைந்திருப்பது, வஉசி துறைமுகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விண்வெளித் தொழில் மண்டலமான குலசேகரப்பட்டினம் அருகாமையில் இருப்பது போன்ற சாதகமான அம்சங்களால் தூத்துக்குடி இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இத்தளத்தில் சர்வதேசச் சந்தைக்கான நவீன சரக்குக் கப்பல்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பசுமை எரிசக்தி மூலம் இயங்கும் கப்பல்கள் கட்டப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மையப்படுத்தி பல்வேறு உலகளாவிய நிறுவனங்களை ஈர்த்து வருகிறது.

அவ்வகையில், இந்த ஒரே திட்டத்தின் மூலம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளதால், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய பகுதிகள் பெரும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் அடிக்கல் நாட்டு விழா குறித்த அறிவிப்புகள் விரைவில் அரசிடமிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.