நாட்டையே உலுக்கிய மேகாலயா தேனிலவு கொலை வழக்கு... மனைவி ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!

 

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி தனது மனைவி சோனம் ரகுவன்சியுடன் கடந்த ஆண்டு மே மாதம் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்படும் சோனம் ரகுவன்சிக்குச் ஷில்லாங் மாவட்ட நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், சோனமிற்கு ஏன் ஜாமின் வழங்கப்பட்டது என்பதற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது ஒரு சாதாரண "எழுத்துப் பிழை" அல்ல, காவல்துறையின் மிகப்பாரிய சட்ட மீறல் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

கைதுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை: சோனம் ரகுவன்சியைக் கைது செய்தபோது, அதற்கான காரணங்களைத் தெளிவாகவும் முறையாகவும் அவரிடம் காவல்துறை தெரிவிக்கவில்லை. இது ஒருவரின் அடிப்படை உரிமை மீறல் என நீதிமன்றம் கருதியது.

சோனம் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுக்கு உரிய 103(1) BNS (கொலைக்கான தண்டனை) பிரிவுக்குப் பதிலாக, அனைத்து ஆவணங்களிலும் தவறுதலாக 403(1) BNS (சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துதல்) என்ற பிரிவு குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ஒரு சிறிய "கிளரிக்கல் எரர்"  என ஏற்க முடியாது என்று நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கைது தொடர்பான படிவங்களில் உள்ள பல முக்கியக் கட்டங்கள் பூர்த்தி செய்யப்படாமலேயே இருந்ததை நீதிமன்றம் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியது.

நீதிமன்றம் சோனமிற்குச் சில கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினை வழங்கியுள்ளது. இதன்படி, அவர் 50,000 ரூபாய் மதிப்பிலான தனிநபர் பிணை மற்றும் அதே தொகைக்கான இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மேலும், அவர் ஷில்லாங் நகரத்தை விட்டு வெளியேறக்கூடாது என்றும், வழக்கு விசாரணை நடைபெறும் அனைத்து நாட்களிலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சாட்சிகளைக் கலைக்கவோ அல்லது ஆதாரங்களை அழிக்கவோ முயலக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பினால் ஆத்திரமடைந்த ராஜா ரகுவன்சியின் குடும்பத்தினர், தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், ஜாமினை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேகாலயா காவல்துறையின் இந்தச் சட்டப் பிழைகளால்தான் ஒரு கொலைக் குற்றவாளிக்கு ஜாமின் கிடைத்துள்ளது என்று அவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்த கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவையே உலுக்கிய இந்தத் தேனிலவு கொலை வழக்கில் சோனம் ரகுவன்சிக்கு ஜாமின் கிடைத்துள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.