பிரதமர் மோடியின் பிரிக்ஸ் உரை குறித்து மெகபூபா அதிருப்தி!

 

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் காசா விவகாரம் மற்றும் ஈரானியத் தலைவர் படுகொலை குறித்துப் பிரதமர் மோடி பேசாதது ஏமாற்றமளிப்பதாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஜவஹர்லால் நேரு காலம் முதலே இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையையும் அணிசேராக் கொள்கையையும் பின்பற்றுவதில் பெருமை கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். உலகளாவிய மனித உரிமைச் சாம்பியன் என்ற முறையில் இந்தியாவின் பேச்சு அமையவில்லை எனக் குறிப்பிட்ட அவர், காசாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரம் மற்றும் ஈரானின் தலைவர் கொல்லப்பட்டது குறித்தும் பிரதமர் தனது உரையில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்றார்.

ஒரு பள்ளிக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட சுமார் 150 மாணவிகள் படுகொலை குறித்தும் மாநாட்டில் ஒரு வார்த்தை கூடப் பேசப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார். மாநாட்டிற்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய மனித உரிமை மீறல்கள் குறித்து மௌனம் காப்பது ஏமாற்றமளிப்பதாகவும், இந்தியாவின் குரல் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்தார்.