undefined

மேல்மலையனூர் தேரோட்டம்... நாளை விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 

விழுப்புரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசிப் பெருவிழா கடந்த சில நாட்களாகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை பிப்ரவரி 21, சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., வெளியிட்டுள்ள அறிக்கையில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, நாளை (21.02.2026, சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்துச் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் இயங்கும்.

தேர்வுகள் வழக்கம் போல் நடக்கும்: பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களுக்கு நாளை இறுதித் தேர்வுகள் ஏதேனும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அந்தத் தேர்வுகள் மாற்றமின்றி வழக்கம்போல் நடைபெறும்.

தேரோட்டத்தைக் காணத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெற்ற 'மயானக் கொள்ளை' உற்சவத்தைத் தொடர்ந்து, நாளை நடைபெறும் தேரோட்டம் இந்த விழாவின் மிக முக்கியமான நிகழ்வாகும். அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருவதைக் காணப் பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.