உலக சாதனைப் படைத்த மேல்மருவத்தூர் பக்தர்கள்... ஒரே நேரத்தில் ஒரு கோடி முறை 'குரு போற்றி' மந்திரம் முழக்கம்!
உலக நன்மை வேண்டியும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளாரின் 86-வது அவதாரத் திருநாளை முன்னிட்டும், செவ்வாடை பக்தர்கள் நடத்திய 'கோடி அர்ச்சனை' வழிபாடு உலக சாதனையாகப் பதிவாகியுள்ளது.
ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட கூட்டு வழிபாட்டில், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் இணைய வழியாகவும் நேரடியாகவும் இணைந்து பங்கேற்றனர்.
இந்த ஆன்மிக சங்கல்பத்தில் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, துபாய் என 15-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் தங்களது இல்லங்கள் மற்றும் சக்தி பீடங்களில் இருந்தபடி பங்கேற்றனர். தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதிபராசக்தி அம்மனுக்குச் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, ஸ்ரீசக்கரம் வரைந்து மகா கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் 'குரு போற்றி' மந்திரங்கள் ஒரு கோடி முறைக்கும் மேலாக ஓதப்பட்டுப் புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், ஆன்மிக இயக்கப் பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.
உலக அமைதி நிலவவும், இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்கள் காக்கப்படவும் இந்தச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கத்தின் துணைத் தலைவர் ஸ்ரீதேவி பங்காரு மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் இந்த மாபெரும் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். ஒரே நேரத்தில் இத்தனை நாடுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றிணைந்து மந்திரங்களை முழங்கியது, ஆன்மிக வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.