மெஸ்ஸியின் கடைசிப் போட்டி - தக தக தங்க நிறத்தில் No.10... பிரியாவிடைக்காக வெளியான ஸ்பெஷல் ஜெர்சி!
கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது கடைசி சர்வதேச போட்டிக்காக சிறப்பு ஜெர்சியை வெளியிட்டுள்ளார்.மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், அர்ஜென்டினா அணியின் வழக்கமான ஜெர்சிக்கு பதிலாக புதிய சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார். இந்த ஜெர்சியின் பின்புறத்தில் அவரது பெயரும் புகழ்பெற்ற 10-ம் எண்ணும் தங்க நிறத்தில் இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில் அர்ஜென்டினாவின் ‘Sol de Mayo’ வடிவமும் இடம்பெற்றுள்ளது.
“கடைசி போட்டி... வாழ்நாள் முழுவதும் ஒரு ஜெர்சி” என்ற பொருள்படும் வகையில், “Último partido… Una camiseta para toda la vida” என மெஸ்ஸி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்தார். இதையடுத்து, அர்ஜென்டினா கால்பந்து சங்கம் அவருக்கு சொந்த மண்ணில் பிரியாவிடை போட்டியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, அக்டோபர் 6-ம் தேதி பியூனஸ் அயர்ஸில் உள்ள ரிவர் பிளேட் மைதானத்தில் அர்ஜென்டினா அணி பெனின் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி, ரோட்ரிகோ டி பால் மற்றும் ஜியோவானி லோ செல்சோ ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா அணிக்காக 2005-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான மெஸ்ஸி, தற்போது தனது சர்வதேச பயணத்தின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளார். அவரது கடைசி போட்டிக்காக வெளியிடப்பட்டுள்ள இந்த சிறப்பு ஜெர்சி, அவரது புகழ்பெற்ற 10-ம் எண்ணை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக அர்ஜென்டினா அணியின் முக்கிய வீரராகவும் கேப்டனாகவும் விளங்கிய மெஸ்ஸி, சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் தனது சர்வதேச கால்பந்து பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.