ஒரே நாளில்  8,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா...  ஐடி துறையில் பரபரப்பு!  

 

 

டெக் உலகின் ஜாம்பவானான மெட்டா (Meta) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் எடுத்துள்ள அதிரடி முடிவு, ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்யவும், நிறுவனத்தின் கட்டமைப்பைச் சீரமைக்கவும் சுமார் 8,000 பணியாளர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 10 சதவீதமாகும். வரும் மே 20-ஆம் தேதி பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு கடைசி வேலை நாளாக இருக்கும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2022-23 ஆம் ஆண்டினை "திறமையின் ஆண்டு"   என அறிவித்து 21,000 பேரை நீக்கிய மெட்டா, தற்போது மீண்டும் ஒரு மிகப்பெரிய ஆட்குறைப்பில் இறங்கியுள்ளது. குறிப்பாக நடுத்தர மேலாண்மை (Middle Management), விற்பனை மற்றும் ஆட்சேர்ப்புத் துறைகளில் உள்ள ஊழியர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. "குறைந்த ஊழியர்களைக் கொண்டு அதிகப்படியான வேலையைச் செய்யும் ஏஐ உதவியுடனான எதிர்காலத்தை நோக்கியே மெட்டா பயணிக்கிறது" என ஜுக்கர்பெர்க் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள மெட்டா அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் அமேசான், டிஸ்னி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் இருந்து 73,000-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மெட்டாவின் இந்த நடவடிக்கை மற்ற ஐடி நிறுவனங்களையும் இதே போன்ற முடிவை எடுக்கத் தூண்டுமோ என்ற அச்சம் ஐடி பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் இந்த 'மே 20' திட்டம், டெக் உலகில் மீண்டும் ஒரு கறுப்பு தினமாகப் பார்க்கப்படுகிறது