வாட்ஸ்அப்பில் இனி டிபி வைக்கலைன்னாலும் முகம் காட்டும் - மெட்டாவின் புதிய அப்டேட்!

 

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்ட வாட்ஸ்அப், பயனர்களின் வசதிக்காகப் புதிய வசதி ஒன்றினைச் சோதனை செய்து வருகிறது. இதன் மூலம், இனி டிபி வைக்காத நண்பர்களை அடையாளம் காண்பது எளிதாகப் போகிறது.

வாட்ஸ்அப்பில் யாராவது ஒருவர் தனது புரோபைல் பிக்சரை (DP) வைக்கவில்லை என்றாலோ அல்லது மறைத்து வைத்திருந்தாலோ, அந்த இடத்தில் பயனரின் பெயரின் முதல் எழுத்து (உதாரணமாக 'S' அல்லது 'A') ஒரு குறிப்பிட்ட வண்ணப் பின்புலத்துடன் தோன்றும். ஒரே பெயரில் பல காண்டாக்ட்கள் இருக்கும்போது, இது பயனர்களுக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

வாட்ஸ்அப் தொடர்பான தகவல்களைத் துல்லியமாக வெளியிடும் 'வா பீட்டா இன்ஃபோ' தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உங்கள் போனில் ஒருவருடைய எண்ணைச் சேமிக்கும்போது, அவர்களுக்கு நீங்கள் என்ன புகைப்படம் வைத்திருக்கிறீர்களோ, அதே புகைப்படம் இனி வாட்ஸ்அப் டிபி-யிலும் பிரதிபலிக்கும்.

அவர் வாட்ஸ்அப்பில் டிபி வைக்கவில்லை என்றாலும், உங்கள் போன் காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள புகைப்படம் அந்த இடத்தில் தோன்றும். இதன் மூலம் யார் மெசேஜ் செய்கிறார்கள் என்பதை எளிதில் கண்டறியலாம்.

இந்த அப்டேட் பயனர்களின் தனியுரிமையை எந்த வகையிலும் பாதிக்காது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், நீங்கள் உங்கள் போனில் சேமித்து வைத்துள்ள புகைப்படத்தை மட்டுமே இது காட்டும். மற்றவர்கள் அந்தப் பயனரைப் பார்க்கும்போது, அவர் அமைத்துள்ள பழைய செட்டிங்ஸ் (பெயரின் முதல் எழுத்து) மட்டுமே தெரியும்.

தற்போது இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) பீட்டா வெர்ஷன்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மெட்டா நிறுவனம் விரைவில் வெளியிடும்.