தமிழகத்தில் நவ.1 முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் - வானிலை ஆய்வாளர் கணிப்பு!

 

தாய்லாந்து வளைகுடாப் பகுதியில் உருவான புதிய வானிலை மாற்றம் காரணமாகத் தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து வளைகுடா மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும்.

இந்த அமைப்பு மேற்கு - வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, வரும் நவம்பர் 1-ஆம் தேதி வாக்கில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வலுவான வானிலை அமைப்பின் காரணமாக, நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வட தமிழகம் உள்ளிட்ட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை தீவிரமடையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடலோரப் பகுதி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.