இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

 

இன்று மே 1 தொழிலாளர் தினம்,  பொது விடுமுறை என்பதால், இன்று முழுவதும் சென்னை மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைக்கான கால அட்டவணையின்படி இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அரசு விடுமுறை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விடக் குறைவாக இருக்கும் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் அலுவலகம் செல்பவர்கள் மற்றும் அவசரப் பணிகளுக்காக வெளியே செல்பவர்கள் மெட்ரோ ரயில்களின் நேரத்தை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வழக்கமான நாட்களில் அதிகாலை முதலே ரயில்கள் விரைவாக இயக்கப்படும் நிலையில், இன்று ஞாயிறு அட்டவணைப்படி காலை 5 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும். இதில் காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பயணிகளின் கூட்டம் அதிகரித்தால் அதற்கு ஏற்பக் கூடுதல் ரயில்களை இயக்கவும் நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. விடுமுறை தினமான இன்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள் இந்தக் கால மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்று ஒரு நாள் மட்டுமே இந்த மாற்றம் அமலில் இருக்கும் என்றும், அதற்கு அடுத்த நாள் முதல் வழக்கமான கால அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.