மெட்ரோ ரயில் பணிகள் முடக்கம்... பயணிகள் கடும் அவதி!
சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இரண்டு ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 63,246 கோடி ரூபாய் மதிப்பில், 116 கிலோ மீட்டர் தொலைவிற்கு மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு, முந்தைய தி.மு.க. ஆட்சியில் பணிகள் அனைத்தும் மிக வேகமாக நடைபெற்று வந்தன.
ஆனால் தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் அனைத்தும் ஆமை வேகத்தில் நகர்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் பணிகளுக்காகத் தங்களது சொந்த மாநிலங்களுக்குச் சென்ற வடமாநிலத் தொழிலாளர்கள் இன்னும் முழுமையாகப் பணிக்குத் திரும்பவில்லை. இதன் காரணமாக, விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகளில் தற்பொழுது பெரும் சுணக்கம் ஏற்பட்டு ஒட்டுமொத்த திட்டமும் முடங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வரை வெறும் 52 விழுக்காடு பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதால், குறிப்பிட்ட காலத்திற்குள் ரயில்களை இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. குறிப்பாக பூந்தமல்லி முதல் போரூர் மற்றும் வடபழனி வரையிலான தடத்தில் பணிகள் முடிந்து ஐந்து மாதங்கள் ஆகியும் இன்னும் ரயில் சேவை தொடங்கப்படவில்லை. இதனால் தினசரி அலுவலகம் செல்லும் ஊழியர்களும், பொதுமக்களும் வழித்தடங்கள் இன்றி நீண்ட நேரமாகப் பேருந்துகளில் பயணித்து கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.