வசந்த காலத்தை வரவேற்ற மெக்சிகோ மக்கள்... பிரமிடு முன் திரண்டு உற்சாக வரவேற்பு!

 

மெக்சிகோவின் தியோதிஹுவாகன்பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ‘சூரிய பிரமிடு’ (Pyramid of the Sun) வளாகத்தில், வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் 'ஸ்பிரிங் ஈக்வினாக்ஸ்' விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் பகலும் இரவும் சமமாக இருக்கும் இந்த நாளில், மெக்சிகோ மக்கள் தங்களின் முன்னோர்களான ஆஸ்டெக் மற்றும் மாயன் நாகரிக முறைகளைப் பின்பற்றிப் புதிய ஆற்றலைப் பெறுவதற்காக இங்கே திரண்டு வருகின்றனர்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/3nv-QMPP0as?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/3nv-QMPP0as/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளை நிறப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து பிரமிடு அருகே திரண்டனர். சூரியன் உதிக்கும் போது கைகளை உயர்த்தி, அதன் ஆற்றலைத் தங்கள் உடல் பெறுவதாக நம்பி வழிபாடுகளை மேற்கொண்டனர். பாரம்பரிய இசை முழக்கங்களுடன், பழங்குடியின மக்களின் நடனங்கள் மற்றும் தூப வழிபாடுகள் நடைபெற்றன. இது அந்தப் பகுதியையே ஒரு பழங்கால வரலாற்று இடத்திற்கு அழைத்துச் சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

விழாவின் ஒரு பகுதியாகப் பிரமிடு அமைந்துள்ள பள்ளத்தாக்குப் பகுதிகளில் ஏராளமான வண்ணப் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பைக் கொண்டாடும் இந்த நிகழ்வு, மெக்சிகோவின் மிக முக்கியமான ஆன்மீக மற்றும் கலாச்சார விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த வசந்த காலத் தொடக்கமானது, விவசாயப் பணிகளின் தொடக்கத்தையும், செழிப்பையும் குறிப்பதாக மெக்சிகோ மக்கள் நம்புகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த விழாவால், தியோதிஹுவாகன் பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது.