மெக்சிகோ பாதுகாப்புப் படையில் குட்டி ‘கொமாண்டோ’! 7 கிலோ நாய்க்கு ஹெல்மெட், கேமராவுடன் சிறப்பு பயிற்சி
மெக்சிகோ நாட்டின் தேசிய பாதுகாப்புப் படையில் 13 மாத வயதுடைய ‘கொமாண்டோ’ என்ற குட்டி நாய் புதிதாக இணைந்துள்ளது. வெறும் 7 கிலோ எடை கொண்ட இந்த நாய், பெரிய ரக நாய்களுக்கு மத்தியில் தனித்துவமான கவனத்தை ஈர்த்து வருகிறது.
‘கொமாண்டோ’ ஒரு சிஹுவாஹுவா (Chihuahua) வகை நாய். சுமார் 21 செ.மீ. உயரம் கொண்ட இது, மெக்சிகோ தேசிய பாதுகாப்புப் படையின் மிகச்சிறிய நாய் உறுப்பினராக இடம்பெற்றுள்ளது. அந்த படையின் நாய் பிரிவில் ஜெர்மன் ஷெப்பர்ட், லாப்ரடார் உள்ளிட்ட பெரிய ரக நாய்களே அதிகம் உள்ள நிலையில், கொமாண்டோ வித்தியாசமான உறுப்பினராக மாறியுள்ளது.
வயதான உரிமையாளர்களால் தொடர்ந்து பராமரிக்க முடியாத நிலையில், சுமார் 6 மாதங்களுக்கு முன்பு கொமாண்டோவை மெக்சிகோ தேசிய பாதுகாப்புப் படையினர் தத்தெடுத்துள்ளனர்.தற்போது கொமாண்டோவுக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெரிய நாய்கள் செல்ல முடியாத குறுகிய இடங்கள் மற்றும் சிறிய பகுதிகளுக்குள் சென்று ஆய்வு செய்வதில் இது உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக கொமாண்டோவுக்கு அதன் உடல் அளவுக்கு ஏற்ற வகையில் பிரத்யேக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறிய தந்திர உடை, பாதுகாப்பு கண்ணாடிகள், ஹெல்மெட் மற்றும் தலையில் பொருத்தப்படும் கேமரா உள்ளிட்ட உபகரணங்களுடன் கொமாண்டோ பயிற்சி பெறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுடன், பொதுமக்களுடன் பாதுகாப்புப் படையினருக்கு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தும் வகையிலும் கொமாண்டோ இடம்பெற்று வருகிறது. பள்ளி நிகழ்ச்சிகள், சமூக நிகழ்ச்சிகள் மற்றும் அரசு விழாக்களில் கலந்து கொண்டு வருகிறது.
மேலும், மெக்சிகோவின் சுதந்திர தின அணிவகுப்பிலும் கொமாண்டோ பங்கேற்றுள்ளது. குட்டையான உருவத்துடன் பாதுகாப்பு உடை மற்றும் ஹெல்மெட் அணிந்தபடி அணிவகுப்பில் இடம்பெற்ற காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.மெக்சிகோ தேசிய பாதுகாப்புப் படையின் நாய் பிரிவில் சுமார் 350 நாய்கள் உள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை ஜெர்மன் ஷெப்பர்ட் மற்றும் லாப்ரடார் போன்ற பெரிய ரகங்களைச் சேர்ந்தவை. இந்த நிலையில், வெறும் 7 கிலோ எடையுடன் கொமாண்டோ தனித்துவமான உறுப்பினராக உருவெடுத்துள்ளது.