நள்ளிரவில் ஆய்வு, மருத்துவருக்குத் தொல்லை... தவெக எம்.எல்.ஏ. சரவணன் மீது அரசு மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்!
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அரசு மருத்துவமனையில் நள்ளிரவு நேரத்தில் ஆய்வு என்ற பெயரில் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன், அங்குப் பணியில் இருந்த அரசு மருத்துவரை எழுப்பித் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புற நோயாளிகள் யாரும் இல்லாத நேரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மருத்துவரைத் துன்புறுத்திய தவெக எம்.எல்.ஏ.-வின் இந்தச் செயலுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதுடன், அரசு மருத்துவர்களின் பணிச் சூழல் குறித்தும் விரிவான விளக்கங்களை வெளியிட்டுள்ளனர்.
இரவு நேரப் பணி என்பது அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையான அழுத்தத்தைத் தரக்கூடிய ஒன்றாகும். இந்நிலையில் ஏரல் அரசு மருத்துவமனையில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து 'அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம்' சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் 24 மணி நேரத் தொடர் பணி குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிடப்படவில்லை. அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது மட்டுமே 24 மணி நேரப் பணி மருத்துவரின் முதன்மைக் கடமையாகும்.
விபத்து அல்லது அவசரப் பிரிவு பகுதிக்கு நோயாளி வந்தவுடன், பணியில் உள்ள செவிலியர் அல்லது மருத்துவ உதவியாளர்கள் உடனடியாக 24 மணி நேரப் பணி மருத்துவருக்குத் தொலைபேசி மூலம் தகவல் அளிப்பார்கள். அதன்பிறகு மருத்துவர் வந்து நோயாளிக்கு உரிய சிகிச்சையை அளிப்பார்.
ஏரல் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் பணியில் இருந்த மருத்துவர் எந்தவொரு தவறும் செய்யவில்லை. புற நோயாளிகள் எவரும் இல்லாத அந்த நேரத்தில், அவர் தனது பணி அறையில் தங்கியிருந்து ஓய்வெடுத்துள்ளார்.
மருத்துவர் தனது அறையின் கதவை உள்பக்கமாகத் தாழிட்டு ஓய்வெடுத்தது குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்களுக்குச் சங்கம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த காலங்களில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மீது திருட்டு முயற்சிகள் மற்றும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கடுமையான தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
இதன் காரணமாக, பெண் மற்றும் ஆண் அரசு மருத்துவர்கள் தங்களது சொந்தப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரவு நேரங்களில் பணி அறைகளைப் பாதுகாப்பாக மூடி வைத்து ஓய்வெடுப்பது இயல்பானதும் அவசியமானதும் ஆகும். புற நோயாளிகள் வருகை இல்லாத நேரத்தில் மருத்துவர்கள் ஓய்வெடுப்பதைக் குற்றமாகப் பார்க்க முடியாது என்று சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு மனிதாபிமானமற்ற முறையிலும், உடல்நலனைக் கெடுக்கும் வகையிலும் உள்ள இந்த 24 மணி நேரத் தொடர் பணி முறையை உடனடியாக முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்குப் பதிலாக வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களைப் போலச் சுழற்சி முறைப் பணியை தமிழகத்தில் உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்று மருத்துவ இயக்கங்கள் தரப்பில் பொது சுகாதார இயக்குநரகத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் பிரமுகர்களின் இத்தகைய திடீர் ஆய்வுகள் மருத்துவப் பணியாளர்களின் மன உறுதியைக் குலைப்பதாக உள்ளதாகச் சமூக ஆர்வலர்களும் கவலைத் தெரிவித்துள்ளனர்.