நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்கள்.. எல்லையில் இந்தியாவின் அதிரடிப் பயிற்சி!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில், இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர்களைத் தரையிறக்கி அதிரடி ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது.
ஜெய்சல்மர் பகுதியில் அமைந்துள்ள 'பாரத் மாலா' திட்ட நெடுஞ்சாலையில் ஆகஸ்ட் 21 அன்று இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான போர் ஹெலிகாப்டர்கள் அதிவேகமாக வந்து நெடுஞ்சாலையில் பாதுகாப்பாகத் தரையிறங்கி மீண்டும் பறந்து சென்று தங்களின் திறனை நிரூபித்தன.
போர் அல்லது இயற்கை பேரிடர் போன்ற அவசரகாலச் சூழல்களில், வழக்கமான ராணுவ விமானத் தளங்கள் அல்லது ஹெலிபேடுகள் சேதமடைந்தாலோ அல்லது பயன்பாட்டிற்குச் சாத்தியமில்லாமல் போனாலோ, நெடுஞ்சாலைகளை மாற்றுத் தளங்களாகப் பயன்படுத்தி இயக்கத்தை விரைவுபடுத்துவதே இந்தப் பயிற்சியின் முதன்மை நோக்கமாகும்.
எல்லைப் பகுதிக்கு மிக அருகில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டிருப்பது, எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ள இந்தியப் படைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது. இந்தப் பயிற்சியின் குறிப்பிட்ட தந்திரோபாய நோக்கம் குறித்து இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாகத் தகவல்கள் எதையும் வெளியிடவில்லை என்றாலும், இது படைகளின் தற்காப்பு மற்றும் தயார்நிலையை உயர்த்தும் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.